கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் அதிகரிக்கிறது.

ஏராளமான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமலில் உள்ள நிலையில், பல நாடுகளிலும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் ரத்து செய்யப்படுகின்றன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த தொற்றின் கடும் பாதிப்பை, ஐரோப்பிய நாடுகள் பலவும் சந்தித்து வரும் நிலையில், லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது.

அதேவேளையில் இந்த வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சில நாடுகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன.

மார்ச் 23 வரையிலான காலகட்டத்தில் ஏறத்தாழ 15,000 பேர் இறந்துள்ள நிலையில், உலக அளவில் 4 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவுக்கு அருகே தங்கள் நாடு இருந்தபோதிலும், பல ஆசிய நாடுகள் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன.



இது குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்று நோய்கள் தொடர்பான ஆராய்ச்சி பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் டால்பர்ட் யென்ஸ்வா கூறுகையில், ''இந்த நாடுகளில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தீவிரமானவை. மற்றவர்கள் இதனை கற்றுக் கொள்ளவேண்டும்'' என்று தெரிவித்தார்.

''இந்த தொற்று ஆரம்பமான சீனாவை மட்டுமே நான் உதாரணமாகக் கூறவில்லை.மற்ற சில நாடுகளும் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துள்ளன'' என்று அவர் மேலும் கூறினார்.

தைவான், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஹாங்காங் பிராந்தியத்தில் எடுக்கப்பட்ட தொற்று பரவல் நடவடிக்கைகள் மற்றும் அதன் விளைவுகள் உதாரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

இந்த நாடுகள் கடைப்பிடித்த 5 முக்கிய தடுப்பு நடவடிக்கைகளை யென்ஸ்வா பட்டியலிட்டுள்ளார்.

1. பரிசோதனை, பரிசோதனை, மீண்டும் பரிசோதனை


ஆரம்பத்திலேயே கண்டறிவது இந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒரு முக்கிய காரணியாக விளங்கும் என்று உலக சுகாதார நிறுவனமும், பிபிசியிடம் பேசிய நிபுணர்களும் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.

''எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியாமல், இந்த வைரஸின் முழு தாக்கம் குறித்தோ, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தோ எந்த முடிவுக்கும் வர முடியாது'' என்று யென்ஸ்வா கூறினார்.

அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்று நோய்கள் ஆராய்ச்சி பிரிவு பேராசிரியரான ஜான்சன் கூறுகையில், ''தினமும் 10,000க்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் தென் கொரியா, இரண்டு நாட்களில் சில நாடுகள் ஒரு மாதத்தில் மேற்கொள்ளும் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் விஞ்சி விடுகிறது என்று குறிப்பிட்டார்.

இதேபோல் அதிக அளவில் பரிசோதனை செய்வதே கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒரு முக்கிய வழி என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் பலமுறைகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

''அனைத்து நாடுகளுக்கும் ஒரு முக்கிய செய்தி, பரிசோதனை, பரிசோதனை, பரிசோதனை செய்யுங்கள் என்பதே'' என மார்ச் மாத தொடக்கத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை பலனைத் தரும் என அவர் குறிப்பிட்டார்.

2. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தல்


'கொரோனா தொற்று பாதிப்பு இருப்பவர்களைச் சரியாக இனம் காணுதல், , பரிசோதனைக்கு உட்படுத்துதல், மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவது எனப் பல அம்சங்களிலும் சீனா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன'' என்று ஜான்சன் குறிப்பிட்டார்.

பரிசோதனை செய்வது பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் மட்டுமல்ல, புதிதாகப் பாதிக்கப்படுபவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும் பயன்படுகிறது.

சரியாக இனம்கண்டு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி, அதனால் அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிப்பது என கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைச் சிறப்பாகவும், மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டு வரும் சீனாவால் தங்கள் நாட்டில் பெருமளவு பாதிப்புகளைக் குறைக்க முடிந்ததாக ஜான்சன் தெரிவித்தார்.

அதேவேளையில் தைவான், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகியவை வேறு முறைகளைக் கடைப்பிடிக்கின்றன.

கொரோனா தொற்று இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை அவர்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் இந்நாடுகள், யாரேனும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களுக்கு 3000 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு அபராதமும் விதிக்கின்றன.

''ஒரு சிறந்த உதாரணம் கூற வேண்டுமானால், கடந்த மார்ச் 12-ஆம் தேதியன்று, ஹாங்காங்கில் 445 பேருக்கு கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், அங்கு சுமார் 14,900 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்த அளவு அதிக நபர்களுக்குப் பரிசோதனை செய்ததற்குக் காரணம் எந்த வாய்ப்பையும் அவர்கள் புறக்கணிக்கவில்லை என்பதுதான். இதில் 19 பேருக்கும் மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது'' என்று யென்ஸ்வா குறிப்பிட்டார்.

3. தயார் நிலை மற்றும் விரைந்து நடவடிக்கைகள் எடுப்பது



அண்மையில் மேற்கு ஆப்ரிக்காவில் இபோலா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின்போது அங்கு பணிபுரிந்த யென்ஸ்வா, வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் முக்கியம் விரைந்து நடவடிக்கைகள் எடுப்பது. மக்களை அது தாக்கும் முன், நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைவுகூர்ந்தார்.

''தைவான் மற்றும் சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட அதிவிரைவு நடவடிக்கைகள் அந்நாடுகளில் வைரஸ் பரவலைப் பெரிதளவு கட்டுப்படுத்த உதவியது'' என்று அவர் மேலும் கூறினார்.

இது போன்ற ஒரு தொற்று பிரச்சினையைக் கடந்த 2003-இல் தைவான் சந்தித்துள்ளது, அங்கு விரைவான நடவடிக்கைகள் எடுப்பதற்கும், வைரஸ் தொற்று தொடர்பான கட்டுப்பாட்டு மையம் அமைக்கவும் காரணமாக அமைந்தது.

''தொற்று பரவலின் ஆரம்பக் கட்டங்களில் விரைந்து நடவடிக்கைகள் எடுப்பது மட்டுமே பயன் தரும். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இது போன்ற அதிவிரைவு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காரணம் இதனைச் சந்திக்க அந்த நாடுகள் தயார் நிலையில் இல்லை'' என்றார் அவர்.

''நடவடிக்கைகள் எடுக்கும் நேரம், விரைந்து செயல்படுதல் ஆகியவை மிகவும் அவசியம்'' என யென்ஸ்வா மேலும் கூறினார்.

4. சமூக இடைவெளியை கடைப்பிடித்தல்


''ஒரு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்கனவே இருக்கும் பட்சத்தில், வழக்கமான கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மட்டும் போதாது'' என யென்ஸ்வா கூறுகிறார்.

இப்படிப்பட்ட சமயத்தில் தைவான், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கடைப்பிடிக்கப்பட்டது போல சமூக இடைவெளியைப் பராமரிப்பது மட்டுமே சிறந்த பயனைத் தரும்.

ஹாங்காங்கில் வீட்டிலிருந்தே பணியாற்ற மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.மேலும் அங்குப் பள்ளிகள் மூடப்பட்டன. பொது நிகழ்வுகள் பலவும் ரத்து செய்யப்பட்டன.

சிங்கப்பூரில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு இருந்த போதிலும், சமூக இடைவெளி சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டது.

5. சுகாதாரம் பேணுவது


கொரோனா வைரஸ் பாதிப்பைத் தவிர்க்க அடிக்கடி கைகளைக் கழுவுவது மற்றும் தூய்மையாக இருத்தல் அவசியம் என உலக சுகாதார மையம் கூறுகிறது.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
''2003 சார்ஸ் வைரஸ் பாதிப்பிலிருந்து பல ஆசிய நாடுகளும் அனுபவம் பெற்றுள்ளன. சிறந்த முறையில் சுகாதாரத்தைப் பராமரிப்பது மக்களைப் பிணியிலிருந்து காக்கும். மற்றவர்களுக்கும் இது பரவுவதைத் தடுக்கும்'' என யென்ஸ்வா தெரிவித்தார்.

சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் தைவானில் சாலைகளில் பாக்டீரியாக்களை ஒடுக்கும் திரவங்கள் அடங்கிய மையங்களைக் காணலாம். அதேபோல் முக கவசம் அணிவதும் இங்கு இயல்பான ஒன்றாக உள்ளது.

முக கவசம் அணிந்திருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதை முக கவசங்கள் தடுக்க இயலாது என்றபோதிலும் அவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க இயலும்.


Post a Comment

0 Comments