சைக்கிள் வாங்க சேர்த்து வைத்த பணத்தை தூய்மை பணியாளர் நலனுக்கு கொடுத்த 3-ம் வகுப்பு மாணவனுக்கு குவியும் பாராட்டு

Post a Comment
சைக்கிள் வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை தூய்மை பணியாளர் நலனுக்கு வழங்கிய மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ளன. இதனால் பலர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

மற்றொரு புறம் கொரோனாவை ஒழிக்க மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் என பலர் போராடி வருகின்றனர். மேலும் பாதிப்பை சமாளிக்க பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 3-ம் வகுப்பு மாணவன்சைக்கிள் வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை தூய்மை பணியாளர் நலனுக்கு வழங்கியுள்ளான். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் ஓட்டுநராக பணிபுரிபவர் மணிவண்ணன். இவரது மகன் ஜெயஸ்ரீவர்மன் , தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த ஓராண்டாக உண்டியலில் சிறுக சிறுக பணம் சேர்த்து வந்துள்ளார் ஜெயஸ்ரீவர்மன். தற்போதைய கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில் சுகாதார பணியாளர்கள் தினமும் மேற்கொள்ளும் பணிகள் குறித்து தனது தந்தை கூறுவதை கேட்டுக்கொண்டு இருக்கும் ஜெயஸ்ரீவர்மன் அவர்களுக்கு உதவி செய்ய முடிவெடுத்துள்ளார்.

cycle siruvan


அதன்படி சைக்கிள் வாங்க தான் உண்டியலில் சேர்த்த பணத்தை சுகாதார பணியாளர்களுக்கு வழங்குவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பெற்றோர், மகனை பேரூராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு செயல் அலுவலர் குகனனிடம் தான் சேர்த்து வைத்த ரூ.4586 பணத்தை சிறுவன் ஒப்படைத்தார்.

சிறுவனின் பெருந்தன்மை கண்டு வியந்த செயல் அலுவலர் இப்பணத்தை கொண்டு சுகாதார பணியாளர்களுக்கு மாலையில் சுண்டல் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். சிறுவனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter